Last Updated:
“ஃபோன், பாஸ்போர்ட்டை மறந்தால் பரவாயில்லை, கஷ்டப்பட்டு வாங்கிய சாம்பியன்ஸ் கோப்பையை மறந்துவிட்டு செல்வீர்களா?” என்று ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் முன்பு, பயணத்தின்போது ஃபோன், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை மறந்து விட்டுச் சென்றார். அதுகுறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் சாம்பியன்ஸ் கோப்பையை பிரஸ் மீட்டின் முடிவில் மறந்து விட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த தொடர் முழுவதுமே அணியை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் சர்மா ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. இந்த ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
விராட் கோலியும், ரோகித் சர்மாவும் எதிர்வரும் 2027 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா மறதிக்கு பெயர் போனவர் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம். அவர் தனது ஹோட்டல் அறையில் அடிக்கடி போன் மற்றும் பாஸ்போர்ட்டை விட்டுச் செல்வதும், பின்னர் அதனை சக வீரர்கள் அல்லது பணியாளர்கள் எடுத்து வந்து கொடுத்ததும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை வென்ற பின்னர் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. அப்போது பேசிய ரோஹித் சர்மா, ”நான் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதில்லை. எனவே வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறினார்.
இந்த பிரஸ் மீட்டின்போது சாம்பியன்ஸ் கோப்பை மேஜை முன்பு வைக்கப்பட்டது. பிரஸ் மீட் முடிந்து எழுந்து சென்ற ரோஹித் சர்மா அந்த கோப்பையை எடுத்துச் செல்ல தவறிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த பணியாளர் ஒருவர் கோப்பையை எடுத்து ரோஹித் சர்மாவிடம் வழங்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
“ஃபோன், பாஸ்போர்ட்டை மறந்தால் பரவாயில்லை, கஷ்டப்பட்டு வாங்கிய சாம்பியன்ஸ் கோப்பையை மறந்துவிட்டு செல்வீர்களா?” என்று ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.
March 11, 2025 4:59 PM IST