Last Updated:
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ள நிலையில் இன்று பூ மார்க்கெட்டில் மல்லிகை பூவின் விலை மளமளவென உயர்ந்துள்ளது.
மதுரை மாநகரில் உலகப் புகழ் பெற்றது என்றால் ஒன்று மதுரை சித்திரை திருவிழா, மற்றொன்று மதுரையின் மல்லிகைப்பூ. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை உயர்ந்துள்ளது.
அதாவது, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்தைப் பொருத்தும், விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பொருத்தும் மல்லிகை பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும். சத்திரப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளிலிருந்தும் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் மல்லிப்பூ மதுரை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
அதன்படி கோடை காலத்தை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை பூவின் விலை 150-ல் இருந்து 200 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோல் பிச்சி ரூ.300, முல்லை ரூ.200, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.60, செண்டு மல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.500, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.60, அரளி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.60, தாமரை (ஒன்றுக்கு) ரூ.4 ரூபாய்க்கும் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி அதிகமாக உள்ளதால் தற்போது நாளொன்றுக்கு 4 டன் வரத்து உள்ளதாகவும், விசேஷ காலம் எதுவும் இல்லை என்பதால் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றார்கள். மேலும் அடுத்த 10 நாட்களுக்கு அதாவது சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்னும் பூக்களின் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
Madurai,Tamil Nadu

