மட்டக்களப்பில் பெண்களை மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொக்கட்டிச்சோலை வயல் பிரதேச கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரன் ஆகிய மூவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து, வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், இதற்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். அத்துடன், குறித்த இளம் தாயின் 3 வயது 4 மாதக் குழந்தையும் வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் நித்திரை வழங்குவதற்காகப் பயன்படுத்தும் மாத்திரைகளைப் பழச்சாற்றில் (ஜூஸ்) கலந்து கொடுத்துக் கடத்தி, கொலை செய்து நகை கொள்ளையடித்து வந்த முக்கியக் குற்றவாளிகளான காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் சதீஸ்வரன், அவரது மனைவியான 26 வயது சோமசுந்தரம் சர்லியா மற்றும் கணவனின் சகோதரரான 22 வயது வெற்றிவேல் தனோஜன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்த ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்கள் உட்பட 5 பேரை மார்ச் 21 ஆம் திகதி 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸார் கைது செய்தனர். அப்போது இரண்டு ஒட்டோக்கள், ஒரு கார் மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்கள் என்பவை மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான 37 வயது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மார்ச் 26 ஆம் திகதி இரவு மயக்கத்திற்குப் பயன்படுத்தும் ஸ்பிரேயுடன் கைது செய்யப்பட்டார்.
கொள்ளையர்கள் தங்களது வீட்டின் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்துகள், ஸ்பிரே மற்றும் மாத்திரைகள் என்பவை மீட்கப்பட்டன.
மேலும், மயக்க மாத்திரைகளை வழங்கிய வெளிநாட்டுச் சப் ஏஜென்சியான கொழும்பு வத்தளை பகுதியைச் சேர்ந்த மருந்து விற்பனை நிலையத்தின் (பாமசி) உரிமையாளர் ‘சிவா’ என அழைக்கப்படும் திவாகரன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த மார்ச் 22 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில், தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்த இரண்டு கடை உரிமையாளர்கள், மயக்க மருந்து ஸ்பிரே வைத்திருந்த ஆட்டோ சாரதி மற்றும் பாமசி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு எதிராகக் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு மூன்று குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தது:
- மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்த பழச்சாற்றைக் கொடுத்து, அவரது தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டமை தொடர்பில் கணவன் மற்றும் மனைவி மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
- பழுகாமத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்த பழச்சாற்றைக் கொடுத்துக் கடத்திச் சென்று, தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்து, அவரை கொக்கட்டிச்சோலை செல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள கிணறு ஒன்றில் வீசிக் கொலை செய்தமை தொடர்பில் கணவன் மற்றும் மனைவி மீது இரண்டாவது குற்றச்சாட்டு பதியப்பட்டது
- வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாய் மற்றும் அவரது 3 வயது 4 மாதக் குழந்தைக்கு மயக்க மாத்திரை கலந்த பழச்சாற்றைக் கொடுத்து, முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.மேலும், ஏற்கனவே பெண் ஒருவரை கடத்திக் கொல்லப் பயன்படுத்திய அதே கிணற்றில் இளம் தாயை வீசியதுடன், அவரது குழந்தையைச் சதுப்பு நிலப்பகுதியில் தனியாக விட்டுச் சென்றமை தொடர்பில் கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரன் ஆகிய மூவருக்கும் எதிராக மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதன்படி, குறித்த வழக்கு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதவான் மூன்று பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.
கனகராசா சரவணன்

