கறுப்பர்களை வாசிக்க வைப்பதுதான் கறுப்பின எழுச்சிக்கான முன் நிபந்தனை என்பதை அறிந்த மிஷாவ், போராட்டத்தையும் வாசிப்பையும் ஒரே புள்ளியில் இணைக்க விரும்பினார். அதற்காகத் தனது கடை வாயிலைப் போராட்ட முனையாக மாற்ற முனைந்தார். கறுப்பர்களுக்காக, கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்த அந்தக் கடையில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டமேகூட ஒரு போராட்ட வடிவம்தானே. தொடக்க நாட்களில் புத்தக அறிமுகக் கூட்டத்தை கடைக்கு உள்ளே நடத்தாமல், கடை வாயிலில் சாலையில் வைத்து நடத்தத் தொடங்கினார்.

ஹார்லெம் நகரின் ஏழாவது அவென்யூவை ஊடறுத்துச் செல்லும் சாலையின் 125வது தெரு முனையில், தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை அமைந்திருந்தது. பரபரப்பான அந்தச் சந்திப்பில், புத்தக அறிமுகக் கூட்டத்தை கடைக்கு வெளியே ஏற்பாடு செய்து, போவோர் வருவோரின் கவனத்தை ஈர்த்தார். இரு பக்கமும் படிகளைக் கொண்ட ஏணியை வைத்து அதன் மேல் ஏறி, புத்தக அறிமுகம் செய்பவர்களை பேசச் சொல்லி, ஒரு பொதுக்கூட்ட பரபரப்பை ஏற்படுத்தி கவனம் குவிக்கச் செய்தார். இப்படி தொடர்ந்து செய்து வந்ததன் விளைவாக நாளடைவில் எழுத்தாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் அடிக்கடி சந்தித்து விவாதிக்கும் களமாக புத்தகக் கடை மாறியது.
கறுப்பர்கள் அடர்த்தியாக வசித்த ஹார்லெம் நகரின் மையப்பகுதியில் புத்தக அறிமுகக் கூட்டத்தையே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தி வந்ததால், வாயில் கூட்டங்கள் என்ற பெயரில், கறுப்பின உரிமைகளுக்கான போராட்டங்களையும் இதேபோல நடத்த குடியுரிமை அமைப்புகளுக்கு மிஷாவ் தூண்டுகோலாக இருந்தார்.

