Last Updated:
மகப்பேறு வார்டுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில், விபின் குப்தாவிடம் மருத்துவமனை நிர்வாகம் பேரம் பேசியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பிரசவத்தின்போது உயிரிழந்த பச்சிளம் குழந்தையை பையில் வைத்துக் கொண்டு தந்தை புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கோல்டர் என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியைச் சேர்ந்த விபின் குப்தா என்பவர், தனது மனைவியை பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அனுமதிக்கப்பட்ட பின் சுகபிரசவத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றும், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பதற்கு 12 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விபின் குப்தாவின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே, மகப்பேறு வார்டுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில், விபின் குப்தாவிடம் மருத்துவமனை நிர்வாகம் பேரம் பேசியுள்ளது. உங்களது மனைவிக்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்காக, 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
அதற்கு, நீங்கள் சிகிச்சை அளியுங்கள், தான் பணத்தை ரெடி பண்ணி கொண்டு வருவதாக விபின் குப்தா கெஞ்சியுள்ளார். ஆனால், முதலில் பணத்தை கட்டினால் தான் சிகிச்சை அளிப்போம் என, மருத்துவமனை நிர்வாகிகள் ஈவுஇரக்கமின்றி விடாபிடியாக இருந்துள்ளார். இதனால், வேறு வழியின்றி பணத்தை ரெடி செய்ய விபின் குப்தா, மருத்துவமனையில் இருந்து கிளம்பியுள்ளார். பின்னர், குறிப்பிட்ட அளவு பணத்துடன் மருத்துவமனைக்கு திரும்பியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததாகவும், விபின் குப்தாவின் மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் வெளியே போட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதைக் கண்டு கொதித்தெழுந்த விபின் குப்தா, இறந்த பச்சிளம் குழந்தையை அரிசிப் பை போன்ற பையில் போட்டுக் கொண்டு, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அப்போது, மருத்துவமனையில் தனது மனைவிக்கு நிகழ்ந்த அவலம் குறித்து கண்ணீர்மல்க எடுத்துக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கோல்டர் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். உரிய நேரத்தில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காததால், இறந்து பிறந்து பச்சிளம் குழந்தையை பையில் போட்டுக் கொண்டு, தந்தை புகார் அளிக்க சென்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
August 24, 2025 10:00 AM IST


