India
oi-Vigneshkumar
ராஞ்சி: ஒரு பெண்ணின் வீட்டுக்குள் இரவில் அத்துமீறி நுழைந்து, அவரது ஆடைகளை களைய முயன்ற சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பலாத்கார முயற்சி வழக்கில், 26 ஆண்டுகளுக்கு பிறகு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயல் பலாத்கார அல்லது பலாத்கார முயற்சியாகக் கருதப்படாது என்று கூறியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், சில சட்டங்களில் இருக்கும் சிக்கல்களை வைத்து கொண்டு, மோசமான சம்பவங்களை செய்பவர்களும் அதற்கான தண்டனைகளை பெறாமல் தப்பித்துவிடுகிறார்கள். அப்படியொரு சம்பவத்தின் தீர்ப்பு தான் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வந்துள்ளது.

என்ன நடந்தது
கடந்த 1999ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இரவில் தனது வீட்டுக்குள் நுழைந்து, பாலத்காரம் செய்யும் நோக்கில் தனது ஆடைகளை களைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 1999 டிசம்பர் 27ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில், இது பலாத்கார முயற்சி என போலீசார் முடிவு செய்தனர்.
பின்னர் வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை பலாத்கார முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவித்தது. கடந்த 2006 ஜூலை 25ம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா விசாரித்தார்.
ஆதாரம் இல்லை
அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஆராய்ந்த நீதிமன்றம், அந்த நபர் பலாத்காரம் செய்ய முயன்றார் என எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. அந்த நபர் குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் தான் அதை செய்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது சட்டரீதியாக முக்கியமானதாக கருதப்படும். ஆனால், இந்த வழக்கில் பலாத்காரம் என்ற குற்றத்தை நிறைவேற்றும் அளவுக்கு அந்த நபர் எதையும் செய்யவில்லை என்றும் அதற்கான ஆதாரம் இல்லை என உயர் நீதிமன்றம் கூறியது.
இதனால் வெறுமனே ஒரு பெண்ணின் வீட்டுக்குள் இரவில் நுழைவதும், அவரது ஆடைகளை களைவது மட்டும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பலாத்காரம் அல்லது பலாத்கார முயற்சியாகிவிடாது என நீதிமன்றம் தெரிவித்தது. அதேநேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயல் முற்றிலும் ஆபாசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பலாத்கார முயற்சி இல்லை
அந்த செயல் பெண்ணின் மானத்தை அவமதிக்கும் தன்மை கொண்டது என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதால் பலாத்கார முயற்சி என்ற குற்றச்சாட்டை மாற்றி, பெண்ணின் மானத்தை அவமதித்தல் மற்றும் கிரிமினல் நடவடிக்கை தொடர்பான குற்றமாக வழக்கை மாற்றி உத்தரவிட்டது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனை தொடர்பாகவும் நீதிமன்றம் மாற்றம் செய்தது.
8 மாதம் சிறை போதும்
வழக்கு விசாரணை காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஏற்கனவே சுமார் 8 மாதங்கள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அந்த காலமே போதுமான தண்டனையாக இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 1999ல் நடந்த சம்பவத்தில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, கீழமை நீதிமன்றம் வழங்கிய பலாத்கார முயற்சி தொடர்பான தீர்ப்பை மாற்றி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.



