Last Updated:
”தங்கள் பதவிகளுக்கு ஆபத்தில்லை என்பதால், பஞ்சாயத்துகளில் 50% வரை இட ஒதுக்கீடு வழங்கிவிடுகிறார்கள்” என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ”பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டால் தங்கள் பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள். தங்கள் பதவிகளுக்கு ஆபத்தில்லை என்பதால், பஞ்சாயத்துகளில் 50% வரை இட ஒதுக்கீடு வழங்கிவிடுகிறார்கள்” என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில் அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மத்திய அரசு அவையில் அறிமுகம் செய்தது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; ”இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். அனைத்து உறுப்பினர்களும், இந்தத் தருணத்தை போற்ற வேண்டும். புதிய வரலாறு படைக்க நாடாளுமன்றத்திற்கு பொன்னான நாள். இந்த மசோதாக்கள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
மசோதாவை எதிர்த்தவர்களை நாட்டின் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த மசோதாவை அரசியலாக்க பார்க்காதீர்கள். இன்று இந்த மசோதாக்களை எதிர்த்தால், அதன் எதிர்வினைகளை நீங்கள் பல ஆண்டுகள் எதிர்கொள்ள வேண்டும்.
இந்தியாவை கட்டமைப்பதில் பெண்களுடைய பங்கு இனி அதிகம் இருக்கும். கொள்கை அளவில் எந்த ஒரு கட்சியும் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும். பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டால் தங்கள் பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள். தங்கள் பதவிகளுக்கு ஆபத்தில்லை என்பதால், பஞ்சாயத்துகளில் 50% வரை இட ஒதுக்கீடு வழங்கிவிடுகிறார்கள். கையில் துடைப்பம் வைத்திருந்தவர்கள், நாளை சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் உட்காரப்போகிறார்கள்” இவ்வாறு பேசினார்.


