Last Updated:
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மாநகரக் காவல் ஆணையரைப் பணி இடைநீக்கம் செய்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், துணை ஆணையர் சேகர் உட்பட ஐந்து காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்ததை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை என்று கூறி உடைந்து அழுததால் பரபரப்பு நிலவியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பை வென்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்றன. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
June 06, 2025 8:29 AM IST


