ஆசுவாசமடைய இடைவெளிவிட்டேன். அந்த அறையில் கணத்த அமைதி நிலவியது. ஒரு நண்பரை பார்க்க வந்தது போலவோ, நீண்ட நாள் பார்க்காத உறவினரைச் சந்திக்க வந்திருந்தது போலவோ இருந்தால், அவர்களின் ஊனாகிப் போயிருந்த புத்தகக் கடை பற்றி மற்றவர்கள் பேசியிருப்பார்கள். நானும் கேட்டிருப்பேன். ஆனால், லூயிஸ் மிஷாவ் அவர்களை பிரத்யேகமாக நேர்காணல் செய்வதால், மிஷாவ்வின் மனைவி பெட்டியோ, மகன் லூயியோ பேசத் தயங்கினர்.
“என்ன நடந்தது? அரசு கட்டடம் கட்டிய பிறகு நீங்கள் ஏன் மீண்டும் அங்கு கடையைத் திறக்கவில்லை மிஷாவ்?”
“இவா… தந்தால்தானே? அடுத்த தேர்தலில் ராக் ஃபெல்லர் மீண்டும் ஆளுநராகத் தேர்வாகவில்லை. அவரின் வாக்குறுதியை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. 125வது தெருவில் இருந்த கடையை, அந்தத் தெருவின் இறுதியில் இருந்த லெனாக்ஸ் அவென்யூவிற்கு மாற்றினோம்.
இது ஒரு வகையில் நல்லதாக அமைந்ததுன்னுதான் சொல்லுவேன். கடையை மாற்றும் சாக்கில் இருப்பைக் கணக்கெடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சொன்னால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இரண்டு லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. இது தவிர படங்கள், போஸ்டர்கள் எல்லாம் கணக்கில் இல்லை. கறுப்பர்களுக்கான புத்தகங்களைக் கொண்ட, உலகிலேயே மிகப்பெரும் கடை என்னுடைய கடைதான். தொடக்கத்துல கடையிலேயே சமைத்து சாப்பிட்டு, உண்டு உறங்கி ஒரு நாளக்கு அதிகப்ட்சமாக ஒன்றரை டாலர் அளவுக்கே வருவாய் வந்தது. கடைசியில, வாரத்திற்கு சுமார் பத்தாயிரம் புத்தகங்களை விற்கும் அளவுக்கு கடை வளர்ச்சியடைந்தது. கடந்த 30 வருஷத்துல ஒரு நாடகத்துக்கோ, ஒரு படத்துக்கோ நான் போனதில்ல…” பெருமிதத்தில் அவர் முகத்தில் ஓர் உவகையைக் காண முடிந்தது. ஐந்து புத்தகங்களோடு தொடங்கப்பட்ட, புத்தகக் கடை என்று சொல்ல முடியாத ஒரு கடை, ஆலமரம் போல ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டால் யாருக்கும் களிப்பு உண்டாகத்தானே செய்யும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக புத்தக விற்பனைப் பணியில், தவம் போல தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மனிதரை நேர்காணல் செய்கிறோம் என்பதை நினைக்கும் போதே என் உடலில் புல்லரித்தது.

