புதுடெல்லி:
பிராந்தியத்தைப் பாதித்து வரும் கடுமையான காட்டுத் தீ மற்றும் ஈரான் போர் பதற்றங்கள் குறித்து மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவும் சனிக்கிழமை (செப்டம்பர் 12) நேரில் சந்தித்து ஆலோசித்தனர்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் இந்த முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இப்பிரச்சினைகளுக்கு உடனடி கூட்டு நடவடிக்கைகளும், இரு நாடுகளுக்கிடையிலான ஒருமித்த கருத்துமே அவசியமானது எனப் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டின் அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது அதிபர் பிராபோவோவிடம் பேசிய பிரதமர் அன்வார், நிலுவையில் உள்ள இருதரப்பு விவகாரங்களுக்கு விரைந்து தீர்வு காணும் பொருட்டு மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை மீண்டும் நினைவூட்டினார்.
இந்தோனேசியாவின் கலிமந்தான் மற்றும் சுமத்ரா பகுதிகளில் நிலவும் கடுமையான காட்டுத் தீயின் புகையானது மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளைப் பெரிதும் பாதித்து வருகிறது.
மலேசியாவின் 5 காற்றுத் தரம் கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண் (API) அபாயகரமான ‘ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) பிற்பகல் நிலவரப்படி, சரவாக்கின் செரியான் பகுதியில் API குறியீடு அதிகபட்சமாக 178 ஆகப் பதிவாகியுள்ளது. சரவாக்கின் மேலும் மூன்று பகுதிகளிலும் சிலாங்கூரின் ஜோகான் செத்தியாவிலும் காற்றுத் தரம் மோசமடைந்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் 55 நிலையங்கள் மிதமான காற்றுத் தரத்தையும், 8 பகுதிகள் நல்ல காற்றுத் தரத்தையும் பதிவு செய்துள்ளன.
பிரதமர் அன்வார் தமது இந்தியப் பயணத்தின் அடுத்த கட்டமாக கேரளா மாநிலத்திற்குச் செல்லவுள்ளார். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அவர் மாலைத்தீவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



