Last Updated:
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜாவிற்குச் சென்று தரிசனம் செய்தனர்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜாவிற்குச் சென்று தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள லால்பாக் பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகர் சிலை நிறுவப்பட்டு விழாவாக வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்தச் சிலை லால்பாக்சா ராஜா என அழைக்கப்படுவதுண்டு. இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். 1930களில் லால்பாக் பகுதியில் இருந்த சந்தை மூடப்பட்டபோது அப்பகுதி வணிகர்களும் மீனவர்களும் தங்களுக்குப் புதிய சந்தைப் பகுதி கிடைத்தால் விநாயகருக்கு விழா எடுப்பதாக வேண்டிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி, புதிய நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து மீனவர்கள் மற்றும் வியாபாரிகளால் 1934ஆம் ஆண்டு லால்பாக்சா ராஜா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இந்த விழா தொடங்கப்பட்டது.
லால்பாக்சா ராஜாவை ‘நவசாசா கண்பதி’ என்றும் அழைக்கிறார்கள். மராத்தியில் ‘நவ்சாச்சா கணபதி’ என்றால் ‘வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர்’ என்று பொருள். இங்கு வந்து உண்மையான பக்தியுடன் வேண்டிக்கொண்டால் எந்தக் கோரிக்கையும் நிறைவேறும் என்பது லட்சக்கணக்கான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால், விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 நாட்கள் நடைபெறும் கணேஷ் உத்சவ் விழாவின்போது, தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
அவர்களோடு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் வந்து தரிசிப்பர். 10 நாட்களுக்குப் பிறகு லால்பாக்சா ராஜா சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மும்பையின் கீர்காவ் சௌபாத்தி கடற்கரையில் கடலில் கரைக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் லால்பாக்சா ராஜா சிலை நிறுவப்பட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் தான் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மும்பையின் புகழ்பெற்ற ‘லால்பாக்ச்சா ராஜா’ ஆலயத்திற்குச் சென்று ஆசி பெற்றனர். அவர்கள் அங்கு வழிபாடு நடத்தியதுடன், ‘கணபதி பாப்பா’ ஆரத்தியிலும் பங்கேற்றனர்.


