
பிரித்தானியா நோக்கி 105 பேருடன் பயணித்த படகு இங்கிலீஷ் கால்வாயில் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவை நோக்கி சுமார் 105 பேருடன் பயணித்த பாரிய ரப்பர் படகொன்று பிரான்ஸ் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுவன் மற்றும் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் படகில் பயணித்த மேலும் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
வடக்கு பிரான்சின் கலே நகருக்கு அருகிலுள்ள பிளெரியோ கடற்கரையிலிருந்து பிரித்தானியா நோக்கி திங்கட்கிழமை அதிகாலை புறப்பட்ட குறித்த படகு, விஸ்ஸாண்ட் கடற்பரப்பில் வைத்து சமநிலையை இழந்து கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்தவர்கள் விடுத்த அவசர அபாய சமிக்ஞையையடுத்து, மீட்புக் குழுவினர் உலங்குவானூர்தி சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சுமார் 30 வயதை உடைய இரு பெண்கள் மற்றும் 10 வயதுடைய சிறுவன் ஆகிய மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். காயமடைந்த ஏனையோர் கரைக்கு கொண்டு வரப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரெஞ்சு அரச சட்டத்தரணிகள் மற்றும் நீதித்துறை பொலிஸார் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் காலநிலையை சாதகமாகப் பயன்படுத்தி, தாங்க முடியாத அளவிற்கு அதிகளவான அகதிகளை சிறிய மற்றும் தரமற்ற படகுகளில் ஆபத்தான முறையில் ஏற்றி அனுப்புவதே இவ்வாறான தொடர் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆங்கில கால்வாய் ஊடாக சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவை சென்றடையும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ஆபத்தான கடல் பயணங்களில் நிகழும் உயிரிழப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளிடையே பாரிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சவாலை ஏற்படுத்தியுள்ளது.

