ஈப்போ:
பேராக் மாநிலம் முழுவதும் சட்டவிரோதப் பொது லாட்டரி விற்பனை மற்றும் இணையவழி (Online) சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 33 வணிகக் கட்டிடங்களின் மின்சார விநியோகம் இன்று அதிரடியாகத் துண்டிக்கப்பட்டது.சட்டவிரோதச் சூதாட்டச் செயல்களை முற்றாக ஒழிக்கும் நோக்கில், பேராக் மாநிலக் காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையும் (JSJ) தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனமும் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
“மின்சார விநியோகத் துண்டிப்பு நடவடிக்கையானது 1953-ஆம் ஆண்டு பகிரங்கச் சூதாட்ட விடுதிகள் சட்டத்தின் (சட்டம் 289) பிரிவு 21A-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டது. உரிமம் இன்றிச் சூதாட்டம் நடத்தத் தங்கள் இடங்களை அனுமதிக்கும் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களைக் கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனல் அபிடின் கூறினார்.
வணிகக் கட்டிடங்களின் உரிமையாளர்களும் நில உரிமையாளர்களும் தங்களது வளாகங்களைச் சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனப் பேராக் காவல் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.சட்டத்தை மீறிச் செயல்படும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக பாரபட்சமின்றிச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் காவல் துறை எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



