கோலாலம்பூர்:
பினாங்கு தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ள ‘யூத் பார்க்’ மலையேற்றப் பாதையில் வழிதவறிச் சிக்கிய இரு இளைஞர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாலை 6.11 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பாகான் ஜெர்மால் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பினாங்கு தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட நபர்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் தங்களது இருப்பிடத்தைப் (Live Location) பகிர்ந்தனர். அதனடிப்படையில் போலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை (SAR) முன்னெடுக்கப்பட்டது. முஹம்மது ஹக்கிம் ரசாலி மற்றும் முஹம்மது ஃபாயிஸ் அப்துல் வஹாப் (இருவருக்கும் வயது 25) ஆகிய இருவரும் மாலை 7.42 மணியளவில் மலை அடிவாரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்” என்று அவர் கூறினார்.
மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் எவ்விதக் காயங்களுமின்றி பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரப்பட்டு, மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இரவு 7.50 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததாகத் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் முன்எச்சரிக்கையுடனும், தொடர்புச் சாதனங்களைச் சரியாகப் பராமரித்தும் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



