கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் ரியாவ் தீவுக்கூட்டப் பகுதியுடனான சுற்றுலா மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கில், பினாங்கு மாநிலத்திற்கும் பாத்தாம் தீவிற்கும் இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மலேசியாவின் பிரபல மலிவுக் கட்டண விமான நிறுவனமான ‘பாத்திக் ஏர்’ (Batik Air), இந்த நேரடி வான்வழிச் சேவையை வாரத்திற்கு மூன்று முறை இயக்கவுள்ளது.
இப்புதிய திட்டத்தின் விவரங்களை பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரச் செயற்குழுத் தலைவர் வோங் ஹொன் வாய் இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
இந்த புதிய விமான வழித்தடம் பினாங்கு மாநிலத்திற்கு மேலும் பல புதிய சந்தை வாய்ப்புகளைத் திறந்துவிடும். இந்தோனீசியாவை முதன்மை இலக்காகக் கொண்டு, புதிய சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான ஒரு முக்கிய தொடக்கப் புள்ளியாக இது அமையும்,” என திரு வோங் ஹொன் வாய் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாத்தாம் தீவு, ரியாவ் தீவுக்கூட்டத்தின் பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. மலேசியா, இந்தோனீசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் மிக முக்கியப் புள்ளியாகவும் இத்தீவு விளங்குகிறது.
பினாங்கு மாநிலத்திற்கு வருகை தரும் அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகளில் இந்தோனேசியர்கள் முன்னணி வகிக்கின்றனர். தற்போது தொடங்கப்படவுள்ள இந்த நேரடி விமானச் சேவை, வழக்கமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பினாங்கில் மருத்துவச் சிகிச்சை நாடி வருவோரின் எண்ணிக்கையையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு 2026-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான தரவுகளின்படி, பினாங்கு அனைத்துலக விமான நிலையம் வழியாக 201,657 இந்தோனீசியப் பயணிகள் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இது கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 192,823 வருகையாளர்களை விட 4.58 விழுக்காடு கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



