கோலாலம்பூர்:
பினாங்கு மாநிலத்தில் உள்ள கட்டுமானத் தளம் மற்றும் உணவகங்களில் குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாக 30 வெளிநாட்டவர்களைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 2) மற்றும் கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று கப்பலா பத்தாஸில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் பினாங்கு குடிநுழைவுத் துறை, தொழிலாளர் துறை, தேசியப் பதிவுத் துறை மற்றும் செபெராங் பிறை மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையில் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 12 வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 7 இந்தோனேசியர்கள், 4 வங்காளதேசிகள் மற்றும் ஒரு மியன்மார் நாட்டவரும் அடங்குவர்.
மேலும் அங்கு பணியாற்றிய உள்ளூர் முதலாளி ஒருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை ஜார்ஜ் டவுன் மற்றும் பாயா தெருபோங் பகுதிகளில் ‘ஒப்பரேசி செலுரா’ (Op Selera) மற்றும் ‘ஒப்பரேசி சாபு’ (Op Sapu) ஆகிய சோதனைகள் நடத்தப்பட்டன. அங்கிருந்த உணவகங்கள் மற்றும் வீடுகளில் சோதனையிடப்பட்ட 37 வெளிநாட்டவர்களில், குடிநுழைவுச் சட்டங்களை மீறிய 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு வேலை வழங்கும் முதலாளிகளுக்கு எதிராக இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் எனப் பினாங்கு குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.



