ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன தனது 69ஆவது வயதில் நேற்று காலை சுகயீனம் காரணமாக காலமானார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் அநுராதபுரம், சாலியபுரவிலுள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியை நாளை (06) பிற்பகல் அநுராதபுரம் நிசலநிம்ன பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார். இதேவேளை காலமான நந்தசேன எம்.பி.யின் வெற்றிடத்துக்கு அநுராதபுர மாவட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ள வீரசேன கமகே நியமிக்கப்படவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம், அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்