Last Updated:
தங்கள் வேட்பாளர்களை விலை பேசுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது குற்றச்சாட்டு முன்வைத்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டெல்லிக்கு கடந்த 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பாஜகவில் இணைந்தால் 15 கோடி ரூபாய் தருவதாகவும், அமைச்சர் பதவி தருவதாகவும் தனக்கு அழைப்பு வந்ததாக சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் முகேஷ் அஹ்லாவத் தெரிவித்திருந்தார்.
இதை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “முறைகேடான அந்தக் கட்சி 55 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு மணி நேரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 16 பேரைத் தொடர்பு கொண்டு, ஆம் ஆத்மியை விட்டு விலகி எங்கள் கட்சியில் சேர்ந்தால் அமைச்சரவையில் இடம் தருகிறோம். மேலும், தலா ஒருவருக்கு ரூ. 15 கோடி தருகிறோம் என்று பேசியுள்ளனர்.
55 இடங்களுக்கு மேல் அந்தக் கட்சி வெற்றி பெறும் என்றால் ஏன் எங்கள் கட்சி வேட்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும்? உண்மையில், இந்தப் போலியான கருத்துக் கணிப்புகள் சில வேட்பாளர்களை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், எங்களில் ஒருவர் கூட அப்படியாக உடையமாட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என்று துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவிடம் பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக, பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங், முகேஷ் அஹ்லாவத் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
February 07, 2025 9:58 PM IST
பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழல் தடுப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்


