Last Updated:
ராகுல் காந்தி குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உரையாடி, பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் உறுப்பினர்களை நீக்க வேண்டும் என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உரையாடினார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “குஜராத் காங்கிரஸில் இரண்டு வகையான தலைவர்களும், உறுப்பினர்களும் உள்ளனர். மக்களிடத்தில் உண்மையாகவும், அவர்களுக்காகப் போராடவும், மக்களை மதிக்கவும், காங்கிரஸின் சித்தாந்தங்களை அவர்கள் மனதில் வைத்துள்ள ஒரு வகை காங்கிரஸாரும், மக்களிடத்தில் அந்நியப்பட்டு, மக்களை மதிக்காமல், பாஜகவுடனும் இருக்கும் காங்கிரஸார் மற்றொரு வகை என இரண்டு வகையாக இருக்கிறார்கள்.
நாம் குஜராத் மக்களோடு ஒன்றிணைய இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. முதல் வேலை இந்த இரண்டு குழுவையும் தனித்தனியாகப் பிரிப்பது. பிறகு 40 நபர்களையாவது கூட கட்சியில் இருந்து நீக்குவது. அப்படி நீக்கினால் அது மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவுக்கான இறக்குமதி வரியை குறைத்த இந்தியா.. டிரம்பின் நடவடிக்கை காரணமா?
குஜராத் விவசாயிகளைப் பாருங்கள். அவர்கள் ஒரு புதிய தொலைநோக்குப் பார்வைக்காகக் கத்துகிறார்கள். கடந்த 20-25 ஆண்டுகளின் தொலைநோக்குப் பார்வை தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸால் அந்த தொலைநோக்குப் பார்வையை எளிதில் வழங்க முடியும். ஆனால் இந்த இரண்டு வகையான மக்களையும் வடிகட்டாவிட்டால் இது சாத்தியமில்லை” எனப் பேசினார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “ராகுல் காந்தி தனது சொந்தக் கட்சியினரையே கொடூரமாக ட்ரோல் செய்து, தன்னை கண்ணாடியாகக் காட்டிக் கொண்டார். தேர்தலில் தோற்பது கலை என்றால், அதற்கு ராகுல் காந்திதான் கலைஞர். 90க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோற்றவர் ராகுல் காந்தி” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் காங்கிரஸாரை நீக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியதற்கு பாராட்டியுள்ள காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய சிங், தனது எக்ஸ் பக்கத்தில், “ராகுல் காந்தியின் கருத்திற்கு எனது பாராட்டுகள். நான் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கொடுத்த அறிவுரைகள் நன்றாக நினைவு இருக்கிறது.
मैं @RahulGandhi जी को उनके बयान के लिए बधाई देता हूँ। मुझे याद है मैं जब एमपी के मुख्य मंत्री के रूप में गुजरात में प्रचार करने गया था तब मुझे निर्देश दिए गए थे कि मैं @RSSorg के ख़िलाफ़ ना बोलूँ। हिंदू नाराज़ हो जाएँगे। संघ हिंदुओं का प्रतिनिधित्व नहीं करता। वह केवल धर्म के नाम…
— Digvijaya Singh (@digvijaya_28) March 9, 2025
அந்தப் பிரச்சாரத்தில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராகப் பேசக்கூடாது என்றும், இந்துக்கள் கோவம் அடைவார்கள் என்றும் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) இந்துக்களின் பிரதிநிதி கிடையாது. அது மதத்தின் பெயரால் இந்துக்களைத் தவறாக வழிநடத்துகிறது மற்றும் சுரண்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
March 09, 2025 8:15 PM IST


