Last Updated:
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த ஏழு பேர் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
ஆம் ஆத்மியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட ஏழு எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி.க்கள் இருந்த நிலையில், 7 பேர் பாஜகவில் இணைந்ததன் மூலம் தற்போது அக்கட்சிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட ஏழு எம்.பி.க்கள் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாஜகவுக்கு தற்போது மாநிலங்களவையில், 113 எம்.பி.க்களும், என்.டி.ஏ. கூட்டணிக்கு 148 எம்.பி.க்களும் உள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், ராஜிந்தர் குப்தா மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகியோர் இப்போது பாஜக நாடாளுமன்றக் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். பிரதமர் தலைமையின் கீழ் தேசிய வளர்ச்சிக்காக பாஜகவில் இணைந்துள்ளவர்களை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள ஏழு எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், ஏழு எம்.பி.க்களும் பாஜகவில் இணைந்ததை ஏற்றுக்கொண்டார் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
இந்திய அரசியலமைப்பின் 10வது அட்டவணையின் கீழ் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயாது. இதற்கு காரணம் இந்த சட்டத்தின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைவதற்கு இச்சட்டத்தில் இடம் உள்ளது. எனவே ஆம் ஆத்மியின் 10 எம்.பி.க்களில் 7 பேர் பாஜகவில் இணைந்ததால் அவர்கள் மீது கட்சித்தாவல் சட்டம் பாயாது.

