மாநில இந்தியச் சமூகத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தம் 53 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார். இதில் இந்தியக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகளை வழங்குவதற்காக 35 லட்சம் ரிங்கிட்டும், ‘ஜுவால் காசிஹ் ஜோகூர்’ திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 63 இடங்களில் 54 ஆயிரம் ‘கொம்போ காசிஹ்’ தொகுப்புகளை வழங்குவதற்காக 18 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தாமான் தம்போய் இந்தா, ஜாலான் தித்திவங்சாவில் நேற்றிரவு நடைபெற்ற ‘தீபாவளி பங்சா ஜோகூர் 2026’ கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.இனம், சமயம், பின்னணி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மாநில மக்கள் அனைவரும் பங்சா ஜோகூர் என்ற ஒரே பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒன் ஹஃபிஸ் வலியுறுத்தினார்.மறைந்த சுல்தான் சர் அபுபக்கரின் ஆட்சிக்காலம் முதலே ஒற்றுமை உணர்வு ஜோகூரின் அடையாளமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மரபைத் தொடர்ந்து பேணுவது அனைவரின் பொறுப்பாகும் என்றார்.


மாநிலத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருந்தாலும், அந்த வெற்றியுடன் திருப்தியடைந்து நின்றுவிடக் கூடாது. மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர்களின் நலனைத் தொடர்ந்து காக்கவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதோடு, பங்சா ஜோகூர் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் பணிகளும் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு இன மக்களும் ஒன்றுகூடிய இக்கொண்டாட்டத்தில் மொத்தம் 75 விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டதாகவும், அவற்றில் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பு மலேசியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் ஜோகூர் இந்தியச் சிறு வியாபாரிகள், அங்காடி வியாபாரிகள் (ஜிப்தா) சங்கத் தலைவர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார். பண்டிகைக் கொண்டாட்டத்துடன் உள்ளூர் வியாபாரிகளுக்கும் வணிக வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு அமைந்திருந்தது.


ஜோகூர் மாநில ம.இ.கா. தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர், பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் பி.பண்ணீர் செல்வம், காஹாங்க்க் சட்ட மண்ற உறுப்பினர் வே.ருகெந்த்திரன், சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாரன் ராமன், ஜோகூர் காவல்துறை தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் பின் அர்சாட், உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இந்தியச் சமூகத்தின் நலன், கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு ஆகியவற்றுக்காக சுல்தானா ரோகாயா அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.இந்தியச் சமூகத்தின் பண்டிகைக்காலச் செலவுச் சுமையைக் குறைப்பதுடன், பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தையும் பரஸ்பரப் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் தளமாக இத்தீபாவளிக் கொண்டாட்டம் அமைந்தது.


