பரந்தூர் விமான நிலையம்: விஜய் அரசின் நிலைப்பாடு தான் என்ன? மத்திய அரசு வேற இப்படி சொல்லுதே?
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில் தற்போதுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆட்சியில் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் அனுமதியும் பெற்றும் ஒப்பந்தம் கோரும் நிலைக்கு சென்றது. இந்நிலையில் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக ஆட்சி கவிழ்ந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. விஜய் ஏற்கனவே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்து தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை தடுப்போம் என வாக்குறுதி தந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த போவதில்லை என அமைச்சர்கள் பலரும் பேட்டி தந்தனர். விமான நிலையத்திற்கான நிலம் கையெடுப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில், பரந்தூரிலிருந்து விமான நிலையத்தின் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் , பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவரங்களை வெளியிட்டார்.
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூரை தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. டிட்கோ நிறுவனம் சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக சுமார் 10,500 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் , பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது. நிலத்தை கையகப்படுத்துவது, திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது மற்றும் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளை பெறுவது ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பொறுப்பு என அப்போதே அரசு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
5,746 ஏக்கர் பரப்பளில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது, இதில் 2,500 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். இதுவரை இந்த திட்டத்தை கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த போவதில்லை மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என அமைச்சர்களின் பேட்டி மூலம் கூறி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே பல தரப்பிலும் பரந்தூரை விடுத்தால் சென்னையின் 2ஆவது விமான நிலையம் அமைக்க வேறு இடமே இல்லை என்பதால் அரசு இந்த திட்டத்தை கைவிட கூடாது என அழுத்தம் தந்து வருகின்றன.இதனால் விஜய் அரசு இந்த திட்டம் குறித்து தீர்க்கமான ஒரு முடிவினை எடுக்காமலேயே உள்ளது.

