பரந்தூரை விடுங்க.. சென்னையின் 2ஆவது விமான நிலையம் அமைக்க 2 இடங்களில் ஆய்வு நடத்தும் விஜய் அரசு..!!
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலைய திட்டம் வேகம் எடுத்தது. ஆனால் விஜய் தலைமையிலான அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தத்தது. இந்நிலையில் சென்னைக்கு 2ஆவது விமான நிலையம் தேவை என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் 2 இடங்களில் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் ஆட்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது. 13 கிராமங்களை சேர்ந்த சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களை வாங்கி விமான நிலையம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அப்போதே ஆதரவு தெரிவித்த விஜய், தனது தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் தற்போது இத்திட்டத்தை கைவிட்டுள்ளார்.

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது விவசாயிகளுக்கு கொண்டாட்டம் என்றாலும் தொழில்துறையினர் இது மாநில பொருளாதார , தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது, சென்னைக்கு 2ஆவது விமானநிலையம் கட்டாயம் தேவை என கூறுகின்றனர். இந்த சூழலில் தான் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடங்களை தேர்வு செய்யும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பரிசீலனையில் இருந்த பண்ணூர் , படாளம் மற்றும் திருப்போரூர் போன்ற இடங்களுடன், தற்போது கும்மிடிப்பூண்டி மற்றும் செய்யூர் உள்ளிட்ட இரண்டு முக்கிய இடங்கள் சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளாக பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக டைம்ஸ் நவ் செய்தி கூறுகிறது.
புதிய இடம் விவசாயிகளுக்கும் குடியிருப்போருக்கும் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவிகின்றனர். இதற்கிடையே புதிய விமான நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் வரை பயணிகளின் தேவையை சமாளிக்க, சென்னையின் தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து, விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் புதிய டெர்மினல் 5 உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகள் கையாளப்படுவார்கள். ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள டெர்மினல் 3 பணிகள் முடிவடையும் போது திறன் சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 35 மில்லியனாக உயரும்,இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்தால் மொத்த திறன் ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசு பொறுப்பேற்றது முதலே பரந்தூர் விமான நிலையம் தான் ஹாட் டாபிக். இந்த திட்டத்தை அவர் தேர்தல் வாக்குறுதிக்கு மதிப்பு தந்து ரத்து செய்வாரா இல்லை தொழில்துறை அழுத்தத்திற்கு பணிந்து திட்டத்தை நீட்டிப்பாரா என பல விவாதங்கள் எழுந்த நிலையில் விஜய் பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்படும் என வெளிப்படையாகவே அறிவித்தார்.

