பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த இரு நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் அளவுக்குக் காட்டுத் தீ மோசமாகிவிட்டது.
கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலவரத்தால் மேற்கு ஐரோப்பா மற்றொரு வெப்ப அலைக்குத் தயாராகிவரும் நிலையில் அதன் ஒரு பகுதியில் தீ வேகமாகப் பரவிவருகிறது.
இரவு முழுவதும் போராடி
பிரான்சின் போர்டோ பகுதியில் மூண்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி, ஒருவழியாகக் கட்டுப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் போர்டோ நகரின் புறநகர்ப் பகுதியிலிருந்து வெறும் 15 கி.மீ (9.3 மைல்கள்) தொலைவில் காட்டுத்தீ எரிந்து வருவதால், அந்நகர மக்கள் “பதட்டமாகவும் அச்சமாகவும்” உணர்வதாக அங்கு வசிக்கும் ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்துள்ளார்.
நகரம் முழுவதும் பரவியுள்ள “அடர்த்தியான புகை மூட்டம்” காரணமாக மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதாகவும், சிலர் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பியர் போர்குவரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்
நகரம் ‘புகையால் சூழப்பட்டிருப்பதைக்’ கண்ட பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள மற்றொருவர், “அது ஒரு பயங்கரமான திரைப்படக் காட்சி போல இருந்தது” என்று கூறினார்.
கட்டுக்கடங்காத தீ
அதேவேளை, ஸ்பெயினின் மத்திய டோலிடோ மாகாணத்தில் உள்ள 11 நகரங்களில் ஒன்பதிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.

இருப்பினும், மாட்ரிட்டிலும் அருகிலுள்ள மாகாணங்களிலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது.
பொதுமக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தப்பி ஓடியதைக் கண்டதாக, ஸ்பெயினிலிருந்து தீ காரணமாக வெளியேற்றப்பட்ட ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

