இதன் பின்னணி குறித்து பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், “அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் பனாமா கால்வாய். இது 82 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த திட்டம் 1881-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் தொடங்கப்பட்டது. நிதி பிரச்னை, தொழிலார்களுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறையவால் அவர்கள் உயிரிழந்தது போன்ற காரங்களினால் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு அமெரிக்கா சம்மந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்தியது. இது இல்லையென்றால் 11,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் கப்பல்கள் பயணிக்க வேண்டும். ஆனால் இந்தக் கால்வாய் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்கிறது. இதனை ஆண்டுதோறும் சுமார் 14,000 கப்பல்கள் பயன்படுத்துகின்றன. அதில் அமெரிக்க கப்பல்கள்தான் அதிகம். ஆண்டுதோறும் சுமார் 270 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் இவ்வழியாக நடக்கிறது.

ஆரம்பத்தில் இதனை அமெரிக்காதான் நிர்வகித்து வந்தது. இதற்கு பனாமா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனது உரிமையை அமெரிக்கா ரத்து செய்தது. இந்த சூழலில்தான் மீண்டும் பனாமா கால்வாய் சர்ச்சையை ட்ரம்ப் தொடங்கியிருக்கிறார். இதற்கு சீனாவுடன் அதீத நட்பை பனாமா கொண்டிருப்பதுதான் காரணம்.
அதாவது சர்வதேச நாடுகளை இணைக்கும் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் என்ற சீனாவின் பெருவழிப் பாதை திட்டத்தில் பனாமாவும் இணைந்திருக்கிறது. மேலும் பனாமாவில் பெருமளவில் முதலீடுகளையும் சீனா செய்திருக்கிறது. கூடவே அந்த நாட்டில் இருக்கும் இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவேதான், “பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக’ ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், ‘சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை’ என பனாமா சொல்கிறது. ஆனாலும் தனது முடிவிலிருந்து ட்ரம்ப் பின்வாங்குவதாக இல்லை. வரும் காலத்தில் இது பெரும் பிரச்னையாக வெடிக்கும்” என்றனர்.

