Last Updated:
சிவக்குமார் முதலமைச்சரானால் ராமலிங்க ரெட்டிக்கு பெங்களூரு நகர வளர்ச்சித் துறை வழங்கப்படும் என 2023ஆம் ஆண்டிலேயே வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
துறை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் கடந்த 3ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவருடன் 13 பேர் அமைச்சர்களாகினர்.
இந்நிலையில், பெங்களூரு பிடிஎம் லே-அவுட் (BTM Layout) தொகுதியின் எம்எல்ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராமலிங்க ரெட்டி, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ராமலிங்க ரெட்டி தற்போது விலகியுள்ளார். சிவக்குமார் முதலமைச்சரானால் ராமலிங்க ரெட்டிக்கு பெங்களூரு நகர வளர்ச்சித் துறை வழங்கப்படும் என 2023ஆம் ஆண்டிலேயே வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ராமலிங்க ரெட்டிக்கு நீர்ப்பாசனத் துறை தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ராமலிங்க ரெட்டி கடும் அதிருப்தியடைந்ததாக கூறப்படும் நிலையில், தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
எனினும், காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர உள்ளதாக ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். ஒருவேளை மீண்டும் பெங்களூரு நகர வளர்ச்சித் துறை தனக்கு ஒதுக்கப்பட்டாலும், அதை ஏற்கும் முடிவில் தான் இல்லை எனவும் ராமலிங்க ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற 2 நாட்களில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராமலிங்க ரெட்டி.. கர்நாடகா அரசியலில் பரபரப்பு


