மலேசிய இந்திய முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான (பெர்மிம்), பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் தாக்கல் செய்துள்ள 2027 ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டை வரவேற்று, மக்கள் நலன், கல்வி மேம்பாடு மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த பட்ஜெட் எனப் பாராட்டியுள்ளது.
பெர்மிம் தேசியத் தலைவர் முகமட் அஸ்மான் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாம் படிவம் (எஸ்.டி.பி.எம்.) பயிலும் மாணவர்களுக்கு கல்விக் காலம் முழுவதும் 2,500 ரிங்கிட் வாழ்வாதார உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.
இது எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும். மெட்ரிக்குலேஷன் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவியுடன் சமமான இந்த உதவித்தொகை, குறிப்பாக பி40 மற்றும் எம்40 குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதோடு, மாணவர்கள் தங்களது கல்வியை இடையூறு இன்றி தொடர உதவும், என்று அவர் தெரிவித்தார். மேலும், பள்ளிச் சிறப்புத் தொடக்க உதவித்தொகை 200 ரிங்கிட் ஆக உயர்த்தப்பட்டிருப்பதையும், ரஹ்மா பண உதவி, ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் மற்றும் ஈ-காசிஹ் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களையும் பெர்மிம் வரவேற்றுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக 57 பில்லியன் ரிங்கிட் நிதி வசதி, நிறுவன வரி விகிதத்தை 14 விழுக்காடாகக் குறைத்திருப்பது, அத்துடன் பி40 தரப்பைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் தெருவோர வணிகர்களுக்கு 5,000 ரிங்கிட் வரை மடானி நல்வாழ்வு மானியம் வழங்கப்படும் அறிவிப்பு ஆகியவை சிறு தொழில்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்திய சமூகத்திற்காக மித்ரா வாயிலாக 150 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும், பல்வேறு திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதையும் பெர்மிம் வரவேற்கிறது என்றார். இந்த நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என்றும், இந்த உதவிகள் தகுதியுடைய இந்திய முஸ்லிம் மக்களிடம் பயனுள்ள முறையில் சென்றடையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மித்ரா திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற விரும்பும் இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு, மித்ரா இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பப் படிவங்களை நிரப்புவது, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொள்வது போன்ற விடயங்களில் வழிகாட்டுதல் வழங்க பெர்மிம் தயாராக உள்ளது. தகுதியுடைய இந்திய முஸ்லிம் மக்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதன் மூலம் இந்த அரசாங்க உதவிகள் அவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பணியில் பெர்மிம் ஈடுபடும், என்று அஸ்மான் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த பட்ஜெட் எந்த இனத்தையோ சமூகத்தையோ புறக்கணிக்காமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றார். இந்திய முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கல்வி, தொழில் மற்றும் சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்ட இந்த அறிவிப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்த உதவும், என்றார்.
பெர்மிம், பட்ஜெட் 2027-ஐ மக்கள் நலன், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை சமநிலைப்படுத்திய ஒரு உள்ளடக்கிய மற்றும் பொறுப்புமிக்க பட்ஜெட்டாக வர்ணித்துள்ளது. அதேவேளையில், அனைவருக்கும் வளமான மற்றும் ஒற்றுமையான மடானி மலேசியாவை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சியும் மக்களின் நலனும் மேலும் வலுப்பெற இந்த பட்ஜெட் பங்களிக்கும் என்று பெர்மிம் நம்புகிறது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் மடானி அரசாங்கத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று பெர்மிம் தேசியத் தலைவர் முகமட் அஸ்மான் ஷா கூறினார்.



