கோலாலம்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்த கிளந்தான், பச்சோக்கில் உள்ள டாருல் உலூம் இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியின் (A) கட்டிடத் தொகுதியை உடனடியாக சீரமைக்குமாறு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், முழுமையான சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு கல்வி அமைச்சகம், பிரதமர் துறையின் (JPM) செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU) மற்றும் சம்பந்தப்பட்ட பிற முகமைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை பள்ளி சமூகத்திற்கு ஒரு பெரும் சோதனை என விவரித்த அவர், பள்ளி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விரும்பினார். இந்த நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பையும், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கற்றல் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமையாகும்.
நான் முன்பே வலியுறுத்தியது போல, குழந்தைகள் அறிவைத் தேடும் பயணத்தில் அவர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் நலன் ஆகியவை எப்போதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்,” என்று அவர் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.37 மணிக்கு நடந்த சம்பவத்தில், பள்ளி கட்டிடத்தின் மூன்று தொகுதிகள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் கல்விப் பிரிவு, மேற்பார்வையாளர் அறை மற்றும் மாணவர் விடுதி ஆகியவை அடங்கும்.




