
முறையற்ற முறையில் பச்சை குத்துதல் (Tattooing) மூலம் எச்.ஐ.வி (HIV) மற்றும் ஹெபடைடிஸ் (Hepatitis) போன்ற நோய்கள் தொற்றும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஒரே ஊசியைப் பலருக்குப் பயன்படுத்துவதால் இத்தகைய நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என குருணாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தப் பரிமாற்ற விசேட வைத்திய நிபுணர் சந்தன விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை அகற்றிவிட்டு, மற்றொருவருக்குப் புதிய உபகரணங்களைப் பயன்படுத்தினால், இத்தகைய அபாயத்தைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலதிக விளக்கமளித்த விசேட வைத்திய நிபுணர்:
“பச்சை குத்தும் சாதாரண முறை என்பது, சிறிய ஊசியைப் பயன்படுத்தி இரத்தம் வரும்வரை தோலில் சிறிய துளைகளை இடுவதாகும். அவ்வாறு பயன்படுத்தப்படும் ஊசிகளில் இரத்தம் படிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த ஊசியைத் மற்றொருவருக்குப் பயன்படுத்தினால், தோல் வழியாக நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசிகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
எச்.ஐ.வி வைரஸ் இரத்தத் துளியில் மிகக் குறுகிய காலமே உயிர்வாழும், விரைவில் அழிந்துவிடும். ஆனால், ‘ஹெபடைடிஸ் பி’ (Hepatitis B) வைரஸ் இரத்தத்தில் நீண்ட காலம் உயிர்வாழக்கூடியது.
எனவே, அது அதிக ஆபத்தானது. இத்தகைய சேவைகளைப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் பெறுவதே சிறந்தது. இலங்கையில் இத்தகைய இடங்கள் குறைவாகவே உள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஊசிகளைப் பயன்படுத்தும் இடங்களைத் தேடிச் செல்வதே பாதுகாப்பானது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

