
பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள் உருவாகியுள்ள நிலையில் போலோ உட்பட மூன்று புயல்கள் அதிதீவிரமடைந்துள்ளன. கடல் நீர் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றங்கள் குறித்து சர்வதேச வானிலை மையங்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள் தோன்றி நகர்ந்து வருவது சர்வதேச வானிலை அவதானிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போலோ, சுரிக்கே, நோலோ, ஒடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகிய ஐந்து புயல்களே இவ்வாறு ஒரே காலப்பகுதியில் உருவாகியுள்ளன.
இவற்றுள் போலோ, சுரிக்கே மற்றும் நோலோ ஆகிய மூன்று புயல்கள் மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஒடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகியவை நடுத்தர வலிமையுடன் தொடர்கின்றன. இதுதவிர, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பிராந்தியங்களில் மேலும் மூன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும், அட்லாண்டிக் பகுதியில் ‘ஃபே’ புயலும் உருவாகியுள்ளன.
கிழக்கு பசிபிக் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ள போலோ புயலானது மிகக் குறுகிய காலத்தில் உச்சகட்ட ஐந்தாம் வகை புயலாக தீவிரமடைந்தது. புயலின் மையப் பகுதிக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்ட வானிலை கண்காணிப்பு விமானம் மூலம் மணிக்கு சுமார் 285 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று பதிவாகியுள்ளது.
இந்தப் புயல் மெக்சிகோவை நேரடியாகத் தாக்கும் அபாயம் இல்லை என்றாலும், மெக்சிகோவின் குரேரோ மற்றும் மிச்சோகான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை, கடல் கொந்தளிப்பு, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மத்திய பசிபிக் பகுதியில் உருவான நோலோ புயல் ஹவாய் தீவுகளை நோக்கியும், மேற்கு பசிபிக் பகுதியில் நிலைகொண்டுள்ள சுரிக்கே புயல் மிக வேகமாக தீவிரமடைந்து தாய்வானை நோக்கியும் நகர்ந்து வருகின்றன.
இதனால் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஜப்பானின் ஒகினாவா போன்ற பிராந்தியங்களில் இந்த புயல்களின் நகர்வுகள் தொடர்ச்சியாக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஒரே நேரத்தில் பல புயல்கள் தோன்றுவது வழமையான நிகழ்வு என்றாலும், ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று புயல்கள் இவ்வாறு அதிதீவிர நிலையை அடைவது மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டிலேயே இத்தகைய தீவிரத்தன்மை பதிவாகியிருந்தது.
கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடைவதே புயல்கள் திடீரென அசுர பலம் பெறுவதற்கு பிரதான காரணியாக சுட்டிக்காட்டப்படுகிறது. பொதுவாக 26.5 பாகை செல்சியஸுக்கு மேல் கடல் நீர் வெப்பமடையும் போது புயல்களுக்கான சாதகமான சூழல் உருவாகும்.
தற்போது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடற்பரப்பில் பதிவான வெப்பநிலை வழக்கத்தை விட 3.05 பாகை செல்சியஸ் அதிகமாகக் காணப்படுகிறது. இது 2015 ஆம் ஆண்டு வலுவான எல் நினோ பருவத்தில் பதிவான 3.02 பாகை செல்சியஸ் அளவையும் விஞ்சியுள்ளது. எல் நினோ தாக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாகவே புயல்கள் மிகக் குறுகிய காலத்தில் ஆபத்தான நிலையை அடைவதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

