பங்குச்சந்தை கதவை தட்டும் சரக்கு நிறுவனம்.. 4 முக்கிய வங்கிகளுடன் டீலிங்..!
இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ திருவிழா துவங்கியிருக்கும் வேளையில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இந்த வரிசையில் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சிவாஸ் ரீகல் விஸ்கி, ஜேம்சன் விஸ்கி, அப்சலலூட் வோட்கா போன்ற மதுபானங்களை தயாரிக்கும் பெர்நாட் ரிக்கார்ட் SA தனது இந்திய கிளையை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக 4 முன்னணி முதலீட்டு ஆலோசகராக நியமித்து ஐபிஓவிற்காக பணியாற்றி வருகிறது.

பெர்நாட் ரிக்கார்ட் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா 2வது இடத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் உலகிலேயே அதிகமாக விற்கப்படும் விஸ்கி பிராண்டான ராயல் ஸ்டேக் பிராண்டும் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இதோடு லாங்கிடியூட் 77, ராயல் ஸ்டேங் பேரல் செலெக்ட், பெலென்டர்ஸ் ப்ரைட், பெலென்டர்ஸ் ப்ரைட் ரிசர்வ் கலெக்ஷன், 100 பைப்பரஸ், ப்ரீமியம் பிராண்டுகளான பாலென்டைன்ஸ், கெலென்லெவிட், ராயல் சல்யூட் போன்ற பிராண்டுகளும் இந்த நிறுவனத்தில் கீழ் தான் உள்ளது.
தற்போது ஐபிஓ செயல்பாட்டில் மிகவும் ஆரம்பக்கட்ட பணிகளில் இருக்கும் பெர்நாட் ரிக்கார்ட் இந்தியா நிறுவனம் கோட்டாக் மஹிந்திரா கேப்பிடல், கோல்மேன் சாக்ஸ், ஜேபி மோர்கன், பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் ஆகிய 4 முதலீட்டு வங்கிகளை தனது ஆலோசகராக நியமித்துள்ளது.
இந்த ஐபிஓ முயற்சியில் கூடுதல் உதவிகள் வேண்டுமாயினும் கூடுதல் முதலீட்டு வங்கிகளை இணைக்க பெர்நாட் ரிக்கார்ட் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கார்ஸ்பெர்க் என்னும் பீர் பிரிவு நிறுவனம் இந்தியா பங்குச்சந்தையில் இறங்குவதற்காக 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 700 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் நோக்குடன் செபியிடம் DRHP அறிக்கையில் தாக்கல் செய்தது, இதை தொடர்ந்து தற்போது 2வது மதுபான நிறுவனமாக பெர்நாட் ரிக்கார்ட் களத்தில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் சுமார் 27000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டம் வர்த்தகத்தை கொண்டு இருக்கும் பெர்நாட் ரிக்கார்ட் சுமார் 24 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது.
