கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் நகரின் சாண்ட்விச் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரீட்டா ஜார்ஜெஃப். இவர் கடந்த ஓகஸ்ட் 28-ஆம் திகதியன்று தனது 102-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
கட்டுமான பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்த பாட்டி
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரையும், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சர் நகரையும் இணைக்கும் வகையில் டெட்ராய்ட் ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக ‘கோர்டி ஹோவ் சர்வதேச பாலம் ’கட்டப்பட்டு வந்தது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் பகுதியில் வாழ்ந்து வரும் ரீட்டா, இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.
தனது 100-வது பிறந்தநாளிலேயே இந்தப் பாலத்தின் மீது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பாலம் கட்டி முடிக்கப்படும் வரை மேலும் 2 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது தனது 102-வது பிறந்தநாளில் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்
இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்! எனது 7 வயதில் பீட்டர் மற்றும் இண்டியன் ரோடு சந்திப்பில் வசித்தபோது, பாலத்தில் மக்கள் கூட்டமாக இருந்ததை பார்த்த நினைவிருக்கிறது.
ஆனால் அப்போது என்ன நடக்கிறது என்று புரியும் வயது இல்லை.

இப்போது இந்த வயதில் சாண்ட்விச் பகுதிக்குச் செல்வதே கடினம், இருந்தாலும் இந்த கோர்டி ஹோவ் பாலம் நமது நகரத்திற்குச் செய்துள்ள நன்மைகளை நான் பாராட்டுகிறேன். இது மிகவும் அற்புதம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பாலத்தைக் கடந்து முடித்த ரீட்டாவிடம், செய்தியாளர்கள் உங்களது அடுத்த (103-வது) பிறந்தநாளுக்கான ஆசை என்னவென்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் எனது அடுத்த பிறந்தநாளை சென்றடைய வேண்டும், அதுவே எனது ஆசை” என்று மிகவும் எதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிலளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

