(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் 2026 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் கொடிகளும் தேர்தல் பிரச்சாரப் பொருட்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தேசிய முன்னணிக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜோகூர் தேசிய முன்னணி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜோகூர் மாநில தேசிய முன்னணியின் தகவல் பிரிவுத் தலைவர் ஹாஜி முகமட் இஸ்ராக் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முன்னணி ஒருபோதும் வன்முறை அல்லது சேதப்படுத்தும் அரசியலை ஆதரிக்கவில்லை என்றும், முதிர்ச்சியான, ஒழுக்கமான, உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரத்தையே முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி எந்தவொரு தரப்பும் ஆதாரமின்றி தேசிய முன்னணியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது பொறுப்பற்ற தனிநபர்களின் செயலா அல்லது தேசிய முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என்பதையும் விசாரணை மூலம் கண்டறிய வேண்டும் என்றார்.
மேலும், ஆதாரமின்றி இந்தச் சம்பவத்துடன் தேசிய முன்னணியை தொடர்புபடுத்தி அவதூறு பரப்பும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராகக் கட்சியின் நற்பெயரைப் பாதுகாக்க காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்காது என்றும் ஹாஜி முகமட் இஸ்ராக் அப்துல்லா எச்சரித்தார்.



