நோயல் டாடா போட்டா பக்கா ஸ்கெட்ச்.. ஐபிஓ-வில் இருந்து எஸ்கேப் ஆக புது திட்டம்.. சந்திரசேகரனுக்கு மறைமுக செக்?
ஒட்டுமொத்த டாடா குழுமமும் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடாமல் இருக்கப் பல விதமான முயற்சி செய்து வந்தாலும், ஆர்பிஐ டாடா குழுமத்தின் முயற்சிகளுக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் டாடா சன்ஸ்-ஐ பட்டியலிடுவதற்கு அதன் நிர்வாக குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட் புது ஐடியாவை முன்வைத்துள்ளது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைக்க டாடா டிரஸ்ட்ஸ் தலைமையிலான நிர்வாக குழு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

இப்படி இணைக்கும் போது NBFC-க்கான விதிமுறைக்கு வெளியே செல்லும் அளவுக்கு நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் அதிகரிக்கும். இதேபோல் டாடா சன்ஸ் தற்போது வெறுமனே டாடா குழும நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி வைத்திருக்கும் ஒரு முதலீட்டு நிறுவனமாக மட்டுமே உள்ளது.
இந்த இணைப்பின் மூலம் டாடா எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இயக்கும் ஒரு ஆப்ரேட்டிங் நிறுவனமாக மாறும். ஆர்பிஐ விதிகள் கீழ் ஒரு நிறுவனம் வெறும் முதலீட்டு நிறுவனமாக இருப்பதற்கும், நேரடியாகச் செயல்படும் நிறுவனமாக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. இதனால் இந்த இணைப்பின் மூலம் டாடா சன்ஸ் Core Investment Company (CIC) என்ற வரையறைக்கும் வெளியே செல்ல முடியும் என்றும் டாடா டிரஸ்ட்ஸ், டாடா சன்ஸ் நிர்வாக குழுவிடம் கூறியுள்ளது.
இந்த 2 நிறுவனங்களையும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இணைத்த பிறகு உருவாகும் நிறுவனத்தின் மொத்த நிகர சொத்து மதிப்பு ரூ.2,00,158 கோடியாக இருக்கும். இதில் ரூ.1,77,120 கோடி டாடா குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் வகையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றும்.
இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் மொத்த நிகர சொத்துகளில், டாடா குழும நிறுவனங்களில் செய்யப்பட்டு உள்ள முதலீட்டின் பங்கு 90 சதவீதத்திற்குக் கீழ் குறையும் என டாடா டிரஸ்ட்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம், Core Investment Company (CIC) நிறுவனங்களுக்குப் பொருந்தும் விதிமுறைகளை டாடா சன்ஸ் பூர்த்தி செய்யாது என டாடா டிரஸ்ட்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக டாடா சன்ஸ் ஐபிஓ வெளியிடுவதில் இருந்து தப்பிக்க முடியும்.
ஆனால் டாடா சன்ஸ் இதுநாள் வரையில் ஒரு ஹோல்டிங் நிறுவனமாக மட்டுமே இருந்து வரும் வேளையில், ஒரு ஆப்ரேட்டிங் நிறுவனமாக மாறும் பட்சத்தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் மாறும். மேலும் இதற்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகள் அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.
மேலும் சந்திரசேகரனுக்கும், நோய் டாடா மத்தியில் முரண்பாடு இருந்து வரும் வேளையில், டாடா சன்ஸ் நிர்வாக குழு இதை எப்படிக் கையாளும் என்பதில் பெரும் கேள்விகள் உள்ளது. இதேபோல் இத்தகைய திட்டம் இதற்கு முன்பு ஆய்வு செய்யப்படவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டாடா சன்ஸ் ஐபிஓ வெளியிட அவசியம் இல்லாத பட்சத்தில் சந்திரசேகரன் தேவை இதன் நிர்வாக குழுவில் இருக்காது. ஏற்கனவே பதவி நீட்டிப்பு கொடுக்கும் போது டாடா சன்ஸ் ஐபிஓ-வுக்கு தயாராகச் சந்திரசேகரன் அவசியம் என்ற வகையில் தான் டாடா சன்ஸ் நிர்வாகம் அறிவித்தது.

