Last Updated:
லக்னோ-49 (L-49), தைவான் பிங்க் மற்றும் அர்கா கிரண் உள்ளிட்ட உயர்தர கொய்யா ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. மாவட்டத்தில் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
பாரம்பரியமாக நெல், கரும்பு மற்றும் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது லாபகரமான மாற்றுப் பயிராக கொய்யா சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக லக்னோ-49 (L-49), தைவான் பிங்க் மற்றும் அர்கா கிரண் உள்ளிட்ட உயர்தர கொய்யா ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். இங்கு விளையும் கொய்யாப்பழங்கள் தினசரி அறுவடை செய்யப்பட்டு சென்னை கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சந்தைகளுக்கும், உள்ளூர் மொத்த விற்பனை மையங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விவசாயி கந்தசாமி கூறுகையில், “கொய்யா மரங்கள் ஒருமுறை நடவு செய்தால் பல ஆண்டுகள் தொடர்ந்து மகசூல் தரும். தற்போது தினமும் 30 முதல் 40 கிலோ வரை கொய்யாப்பழங்களை அறுவடை செய்து வருகிறோம். சந்தையில் ஒரு கிலோ கொய்யாப்பழம் தரத்தைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. முறையான பராமரிப்புடன் சாகுபடி செய்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும்” என்றார். ஆடி மாதத்தில் கொய்யாப்பழங்களின் வரத்து அதிகரிப்பதாலும், சுபமுகூர்த்த நாட்கள் குறைவதாலும், அந்தக் காலகட்டத்தில் மட்டும் கொய்யாப்பழங்களுக்கு சந்தை விலை சற்று குறைவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 400 கொய்யா செடிகள் வரை நடவு செய்யலாம். செடிகளின் சீரான வளர்ச்சிக்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாக்கவும், அதிக மகசூல் பெறவும் ஆண்டுக்கு இரண்டு முறை தேவையான உரங்களை இட வேண்டும். மேலும், மாவுப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் வேப்பெண்ணெய் அல்லது பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம். நுனி அழுகல் நோய் தாக்கிய கிளைகளை அகற்றி போர்டோ கலவையைப் பயன்படுத்த வேண்டும். போரான் சத்து குறைபாடு காரணமாக பழங்கள் வெடிப்பதைத் தடுக்க போராக்ஸ் கரைசலை இலைகளில் தெளிக்கவும், தேவைக்கேற்ப எருக்கம் கரைசலையும் பயன்படுத்தலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், விளைச்சல் அதிகரித்து வரும் நிலையில், அறுவடை செய்யப்படும் கொய்யாப்பழங்களை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதிலும், உரிய விலைக்கு விற்பனை செய்வதிலும் சிரமம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே, கொய்யாப்பழங்களை மதிப்புக்கூட்டி கொய்யா பழக்கூழ் (Guava Pulp) மற்றும் பிற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்றை அரசு அல்லது கூட்டுறவுத் துறை மூலம் அமைத்துத் தர வேண்டும் என்றும், இதுபோன்ற ஆலை அமைக்கப்பட்டால் அதிக விளைச்சல் கிடைக்கும் காலங்களிலும் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Viluppuram,Tamil Nadu

