Last Updated:
பஞ்சாபில், இருசக்கர வாகன பார்க்கிங் பிரச்சினையில் விஞ்ஞானி அபிஷேக் ஸ்வர்ன்கர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மோண்டி என்பவர் தாக்கியதில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த அபிஷேக் உயிரிழந்தார்.
பஞ்சாபில் பைக் பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக விஞ்ஞானி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் ஸ்வர்ன்கர். 39 வயதான இவர், இவர் படித்து முடித்து விட்டு சுவிட்சர்லாந்தில் பணியாற்றி வந்தார். அண்மையில் நாடு திரும்பியவர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தார். மொஹாலியில் வேலை செய்ததால் அங்கேயே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய அபிஷேக், குடியிருப்பில் உள்ள கீழ் தளத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அபிஷேக் நிறுத்தியிருந்த பைக்கால் இடையூறு ஏற்படுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த மோண்டி என்பவர் கூறியுள்ளார். அது தொடர்பாக, விஞ்ஞானியின் தந்தையுடன் மோண்டி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதை வீட்டில் இருந்து கவனித்த அபிஷேக் கீழே இறங்கி வந்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில், மோண்டி என்பவர் அபிஷேக்கை ஆக்ரோஷமாக கீழே தள்ளிவிட்டு மார்பில் மாறி மாறி பலமாக தாக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் போராடி சண்டையை விலக்கி விட்டுள்ளனர். பின்னர், தாக்குதலில் காயமடைந்த அபிஷேக்கை மீட்டு, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். விசாரணையில் பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக மோண்டி என்பவர், விஞ்ஞானியின் குடும்பத்தினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சம்பவத்தன்று அவர் கடுமையாக தாக்கியதில் அபிஷேக் உயிரிழந்தது குடுயிருப்புவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அபிஷேக்கிற்கு இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரது சகோதரி, தனது ஒரு கிட்னியை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து, விஞ்ஞானிக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மோண்டியை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வாடகை வீட்டில் பைக்கை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு வாய்தகராறில் விஞ்ஞானி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மொஹாலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மோண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
March 13, 2025 7:19 PM IST
நிஜத்தில் ஒரு ‘பார்க்கிங்’ பட கதை… விஞ்ஞானியை அடித்தே கொன்ற கொடூர இளைஞர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி!


