Last Updated:
Blue Drum case | உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் கடற்படை அதிகாரி சவுரவ் ராஜ்புட் கொலையில், அவரது மனைவி மஸ்கன் மற்றும் ஆண் நண்பர் சாஹில் ஆகிய இருவருக்கும் மீரட் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான சவுரவ் ராஜ்புட், தனது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பும் ப்ளூ டிரம்மிற்குள் வைத்து சிமெண்ட் போட்டு மறைத்த வழக்கில் குற்றவாளிகளான மஸ்கன் மற்றும் சாஹில் ஆகியோருக்கு மீரட் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்தவர் கடற்படை அதிகாரியான சவுரவ் ராஜ்புட். இவருக்கு மஸ்கன் எனும் பெண்ணுடன் திருமணம் முடிந்தது. கடற்படை அதிகாரியான சவுரவ் ராஜ்புட் பணி நிமித்தமாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சவுரவ் ராஜ்புட் மனைவி மஸ்கனுக்கு சாஹில் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் தனிமையில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படியாக கடந்த 2025ஆம் ஆண்டு பணி நிமித்தமாக லண்டன் சென்றுவிட்டு மார்ச் மாதம் தனது மனைவி மஸ்கன் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவருக்கு தெரிவிக்காமல் மார்ச் மாதம் சவுரவ் ராஜ்புட் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் தனது மனைவி மஸ்கன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாஹில் ஆகிய இருவரும் தனிமையில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான மோதலில், சவுரவ் ராஜ்புட்டை அவரது மனைவி மஸ்கன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாஹிலும் சேர்ந்து குத்தி கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, தண்ணீர் நிரப்பும் ப்ளூ டிரம்மில் அடைத்து அதில் சிமெண்ட் கலவை போட்டு பூசிவிட்டு, இருவரும் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இன்பச்சுற்றுலா சென்றுவிட்டனர்.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் சவுரவ் ராஜ்புட் வீட்டை சோதனை செய்தனர். அப்போது ப்ளூ டிரம்மில் இருந்து சவுரவ் ராஜ்புட் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, அவரது மனைவி மஸ்கன் மற்றும் மஸ்கனின் ஆண் நண்பர் சாஹில் ஆகிய இருவரும் சேர்ந்து இந்தக் கொலை செய்ததை கண்டறிந்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு மீரட் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. மொத்தம் 13 மாதங்களில், 126 விசாரணை நடைபெற்ற இந்த வழக்கில் மொத்தம் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இறுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த வழக்கில் மஸ்கன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாஹில் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது. அதில், கடற்படை அதிகாரியை கொன்ற அவரது மனைவி மஸ்கன் மற்றும் மஸ்கனின் ஆண் நண்பர் சாஹில் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


