Last Updated:
தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடினர். சென்னையில் ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி மசூதியில் சிறப்புத் தொழுகை நடந்தது. இயக்குநர் அமீர் பங்கேற்றார்.
புனித ரமலானை நாடு முழுவதும் இஸ்லாமியர் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இஸ்லாமியர்கள் திரண்டனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களில் ஒரு சாரார் ரமலான் பண்டிகையை கொண்டாடினர். கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தெரிந்ததாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிறை தெரிந்ததால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் மாநகராட்சி திடலில் ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி மசூதி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். இதில் திரைப்பட இயக்குநர் அமீரும் பங்கேற்றார். தொழுகையைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி புதுத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பெண்கள், சிறுவர், சிறுமியர், முதியோர் என திரளானோர் பங்கேற்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நெல்லை பஜார் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு இறைவனை வேண்டி தொழுகையில் ஈடுபட்டனர். தென்காசி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தபியா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜீம் ஆ பள்ளிவாசல் சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கோவை குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் மைதானத்தில் ஜாக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பித்ரா எனப்படும் தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுத்தனர்.
டெல்லி ஜாமா மசூதியின் சுற்றுவட்டாரப் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டன. இதேபோல, மும்பை முகமது அலி சாலையில் பொருட்கள் வாங்க பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. கொல்கத்தா நகரிலும் குல்லா உள்ளிட்டவற்றை வாங்க இஸ்லாமியர்கள் குவிந்தனர்.
March 31, 2025 6:37 AM IST


