Last Updated:
எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
எஸ்டிபிஐ எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் எம்.கே.ஃபைஸி. கடந்த மாதம் 28-ம் தேதி அன்று, கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த திங்கள் கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தில் அமலாக்கத்துறையால் ஃபைஸி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மண்ணடியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்தது. இந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவாக உருவாக்கப்பட்டதுதான் எஸ்டிபிஐ கட்சி.
இதையும் படியுங்கள் : “மக்கள் தொகையை அதிகரிக்க மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பண மோசடி பிரிவுகளின் கீழ் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மீது வழக்குகள் பதிவு செய்து அந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களை கைது செய்திருந்தது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னை மண்ணடி இப்ராஹிம் தெருவில் உள்ள SDPI கட்சி அலுவலகத்திற்குள் 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது 10 க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமலாக்கத் துறையின் நடவடிக்கையை கண்டித்து எஸ்டிபிஐ தொண்டர்கள் அங்கே குவிந்தனர். மேலும் அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் மண்ணடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதன் தலைவர் அப்துல் ரசாக், எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைஸிக்கு பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எஸ்டிபிஐ அரசியல் கட்சியானது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த கட்சிக்கு குறிப்பிட்ட சில இடங்களில் அதிக செல்வாக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
March 06, 2025 8:05 PM IST


