Last Updated:
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து மாநிலங்களவையில் நிதியமைச்சருடன் திமுக எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பிக்களுக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன வழங்கியது என்று வினவினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதாகவும், அந்த தடையை பிரதமர் மோடி தான் விலக்கியதாகவும் கூறினார். அப்போது திமுக எம்.பி.க்கள் எங்கே சென்றார்கள்? என கேள்வி கேட்டார்.
இந்த வாக்குவாதத்தின்போது திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு நிலவியது. சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ₹63,246 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 65 விழுக்காடு மத்திய அரசின் பங்கு எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: புதிய வருமான வரி மசோதா..! நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைப்பு
மேலும் மத்திய பட்ஜெட்டில் எல்லா துறைகளுக்கும் உரிய நிதி ஒதுக்கப்பட்டதாகவும், எந்தத் துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
February 14, 2025 7:51 AM IST