International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த திடீர் தாக்குதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. வளைகுடாவில் நிலவும் இந்த அமைதியின்மை சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், நிலைமையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இருப்பினும், போர் முழுமையாக முடிவுக்கு வர இப்போதைக்கு சாத்தியம் இருப்பது போல தெரியவில்லை.

திடீர் தாக்குதல்
இந்தச் சூழலில் தான் நேற்றிரவு திடீரென அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறுகையில், “இந்த தாக்குதல் திடீர் தாக்குதலாக நடத்தப்பட்டது. இருப்பினும், ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன. உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை. அமெரிக்க படைகள் தொடர்ந்து ஹை அலர்ட் மோடில் தான் இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தளம்
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்தே ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.
கடந்த இரண்டு வாரங்களாகவே ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இரவு நேரங்களில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தது. அதற்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், கடந்த வார இறுதியில் இரு தரப்பும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தின. இதனால் மீண்டும் போர் நிறுத்தம் ஏற்படும் மற்றும் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டன. ஆனால், அந்த நம்பிக்கையும் கூட இப்போது சில நாட்களில் தகர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய்
உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியிலும் பதற்றம் நீடித்து வருகிறது. அப்பகுதியில் சென்ற கப்பல்களை ஈரான் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், வர்த்தக கப்பல்கள் ஈரான் கடற்கரையை ஒட்டிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், பல கப்பல்கள் ஓமன் கடற்கரை வழியாக மாற்று பாதையில் செல்கின்றன.. அதற்கு அமெரிக்கா பாதுகாப்பையும் கொடுத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்தால் அது சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும். இப்போது கச்சா எண்ணெய் 81 டாலரில் வர்த்தகமாகும் நிலையில், அதன் விலை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது. எனவே, மத்திய கிழக்கில் இப்போது என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த உலக நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன.
இந்த தாக்குதல் நடந்த அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், பாசிட்டிவாகவும் இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.




