யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலை இன்றைய தினம் (27) யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அகற்றப்பட்டமை குறித்து காவல்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.
அதன்படி, காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையயே திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ வூட்லர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமைக்கான காரணம் குறித்து ஊடகமொன்று, காவல்துறை ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில், “எல்லான் படை” என்ற குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது.
இது தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளதுடன், வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை திலீபனின் நினைவேந்தலுக்காக யாழ் மாநகர சபையினால் நேற்று (26) வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

