Last Updated:
நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகள் 2026 வரை ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கு கீழ் நகை அடமானம் வைப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் பொருந்தாது.
நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை 2026 வரை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75% மட்டும் கடனாகப் பெற முடியும் என்றும், அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை வங்கியிடம் கடன் வாங்கும் நபர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்க வேண்டும் எனவும், 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட்டின் மதிப்பிலேயே கடன் வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது.
மேலும், தங்க நகைகளுக்கு மட்டுமே கடன், நகை அல்லாத தங்கக் கட்டிகளுக்கு கடன் கிடையாது, 1 கிலோ வரையிலான தங்க நகைகளை மட்டுமே வங்கியில் அடமானம் வைக்க அனுமதி, நகைக்கடன் வழங்கும்போது கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்ப்புகளை அடுத்து நகைக்கடன் விதிமுறைகளைத் தளர்த்த மத்திய நிதித்துறை ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியது. ரூ.2 லட்சத்திற்கு கீழ் நகை அடமானம் வைப்பவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு நிதித்துறை அறிவுறுத்தியது.
அதன்படி, நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறையை 2026 வரை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அறிவுரையை அடுத்து 2026 ஜனவரியில் புதிய விதிமுறை கொண்டுவரப்படலாம் எனவும், விதிமுறைகளை இறுதிசெய்யும் முன் அனைத்து தரப்பின் கருத்துகளும் கேட்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், ரூ.2 லட்சத்திற்கு கீழ் நகை அடமானம் வைப்பவர்களுக்கு புதிய விதிமுறை பொருந்தாது என்று ஆர்பிஐ அறிவிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


