இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி நாடுகள் நின்றன. இதில் துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானை ஆதரித்தது. இந்த நாடுகள் இந்தியாவுக்கு ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தீங்கு விளைவிக்க முயன்றன.
கிட்டத்தட்ட இந்தியாவின் நேரடி எதிரிகளான இந்த 3 நாடுகள் நம் நாட்டின் பொருளாதாரம், ராணுவம் மற்றும் ராஜதந்திர மட்டங்களில் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கத் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றன. தவிர உலக நாடுகளுக்கு மத்தியில் மற்றும் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு இருக்கும் செல்வாக்கைக் குறைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை சீர்குலைப்பதும் இந்த நாடுகளின் நோக்கமாக இருந்து வருகிறது.
சண்டே கார்டியனின் அறிக்கையின்படி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சீனா மற்றும் துருக்கியிடமிருந்து வலுவான தூதரக மற்றும் ராணுவ ஆதரவை பாகிஸ்தான் பெற்றது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய பல ஆயுதங்களில் ‘சீனாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற முத்திரை, ஆசியாவின் புவிசார் அரசியல் நிலைமை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகி வருவதை வெளிப்படுத்தியது.
ஏற்கனவே தனது CPEC திட்டத்தின் மூலம் சீனா, பாகிஸ்தானுக்குப் பெரியளவில் கடன்களை வழங்கியுள்ளது. சீனாவுடனான கூட்டணி மூலம் துருக்கிக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆதரவு கிடைத்து வருகிறது. அதே போல சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் சில சீன வங்கிகள் சமீபத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பெரும் கடன்களை துருக்கிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஷாபாஸ் ஷெரீப் துருக்கிக்குச் சென்றார். இவருடன் பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் அசிம் முனீரும் சென்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் உதவியதற்காக எர்டோகனுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆசியா திட்டம்:
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான துருக்கியின் “Asia Anew Initiative”, பிரிக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்சிஓ போன்ற அமைப்புகளில் அதிக ஈடுபாட்டிற்கான பாதையாக சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதை முன்னுரிமைப்படுத்துகிறது. ஆசியா மீதான இந்தக் கவனம் துருக்கிக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய கூட்டு ராணுவப் பயிற்சிகளால் மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது வலுவான இருதரப்பு பாதுகாப்பு உறவு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இது தவிர நம் நாட்டுடனான மோதலின்போது இந்தியாவுக்கு எதிராகத் துருக்கி நாட்டிடமிருந்து வாங்கிய ட்ரோன்களை பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தியது. தவிர போர் பதற்றம் நிலவியபோது துருக்கி தனது போர்க்கப்பல்களில் ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. மேலும் குறைந்தது 3 துருக்கிய விமானங்கள் ஆயுதங்களை ஏந்தி பாகிஸ்தானுக்கு வந்தன.
பிறகு போர் நிறுத்தத்திற்குப் பின் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், சீனாவிற்கு நன்றி தெரிவிக்க நேரில் சென்றார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் துருக்கிக்கு நன்றி தெரிவிக்க அங்காரா சென்றார். சீனா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறுவதிலும், துருக்கி ஒட்டோமான் பேரரசை மீண்டும் உருவாக்கும் கனவிலும் உள்ளது. எப்படிப் பார்த்தாலும் இந்த மூன்று நாடுகளின் ஹிட்லிஸ்ட்டில் இந்தியா பொதுவான நாடாக உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் CPEC திட்டம் மற்றும் சீனாவுடனான துருக்கியின் வளர்ந்து வரும் வர்த்தக உறவு போன்ற விஷயங்கள் இந்தியாவுக்கு எதிரான ராணுவக் கூட்டணியை இந்த நாடுகள் வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.
துருக்கியை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளலாம்?
துருக்கியை எதிர்கொள்ள, இந்தியா ஐரோப்பிய நாடுகளுடன் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், துருக்கியின் பிராந்திய செல்வாக்கைக் குறைக்க, முக்கிய எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாக்க ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈராக் போன்ற முக்கிய மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா இன்னும் உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் துருக்கியின் முக்கிய எதிரிகளான கிரீஸ், சைப்ரஸ் மற்றும் சிரிய குர்திஷ் குழுக்களுடன் வெளிப்படையான கூட்டணி இந்தியாவிற்கு மிக முக்கியமானவை. மேலும், SCO மற்றும் BRICS Plusஇல் துருக்கியின் உறுப்பினர் பதவியை இந்தியா வீட்டோ செய்ய வேண்டும்.

