
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியாகின. நொடிக்கு நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆரம்பம் முதலே தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) முன்னிலை வகித்தது; நேரம் செல்லச் செல்ல த.வெ.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்று, த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியைத் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு எனப் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடினார். தமிழகம் முழுவதும் த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றிச் செய்தியைக் கேட்டு விஜய் உற்சாகமடைந்தார். வெற்றி பெற்றவர்கள் உடனடியாகப் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தொலைபேசி வாயிலாக விஜய் அறிவுறுத்தினார். அதனை ஏற்று, தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர்கள் சென்னைக்கு விரைந்தனர்.
இந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டுப் பனையூர் அலுவலகம் சென்ற விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அலுவலக வளாகத்தில் உள்ள த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து அவர் பாராட்டினார்.
தொடர்ந்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெறுவது குறித்து த.வெ.க. நிர்வாகிகளுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், த.வெ.க. சட்டசபைக் குழுத் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்; இதற்கான கடிதத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திடுகின்றனர்.
மேலும், சென்னை வந்துள்ள த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை ஈ.சி.ஆரில் (ECR) உள்ள ஒரு விடுதியில் (Resort) தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிற கட்சிகளின் ஆதரவை நாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைக்கத் தமக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி விஜய் கடிதம் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

