மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நேற்று (20ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
இந்நிலையில், நேற்று தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தவுடன் மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணியான மகாயுக்தி கூட்டணியே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என சொல்லியுள்ளன.
அதேசமயம், காங்கிரஸ் கூட்டணியான மகாவிகாஸ் அகாடி கூட்டணியும், பாஜக கூட்டணியான மகாயுக்தி கூட்டணியும் தங்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே இந்தத் தேர்தலை சந்தித்துள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து எந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கிறது, ஆட்சி அமைக்கிறதோ அப்போதுதான் இரு கூட்டணியிலும் யார் முதலமைச்சர் என்பது தெரியவரும்.
இப்படியான சூழலில் காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே முதலமைச்சர் பதவிக்கான மோதல் வெடித்துள்ளது.
இதையும் படியுங்கள் :
Maharashtra Exit Poll 2024 : மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும் பாஜக கூட்டணி.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான நானா படோல், “மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடி அரசு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன், வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்வோம். நானா படோல் இப்படி கூறியது உண்மையா என்பதையும் காங்கிரஸ் கட்சியின் கட்டளை அவரிடம் உள்ளதா என்பதும் தெரிய வேண்டும்.
நீங்கள் முதல்வராக ஆகிறீர்கள் என்றால், காங்கிரஸ் உயர்மட்ட தலைமையகம் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி வத்ரா மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அதை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேசமயம், பாஜக கூட்டணியான மகாயுதி ஏற்கனவே தனது முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்துவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ. வேட்பாளர் ராம் கதம் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
