Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை அன்று நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்ததாகவும், இதற்கு எதிராக, மற்ற தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், 14 முறை எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், வரும் புதன்கிழமை அன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்குத்திருட்டு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மாணவர்கள் பிரச்சனை தொடர்பாக ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்த சூழலில், வரும் புதன் அன்று நடைபெறும் கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


