கோலாலம்பூர்:
தெலோக் பாங்லிமா காராங் பகுதியில், சுங்கை லங்காட் ஆற்றுப் பகுதியை நோக்கிப் பச்சை நிறத்தில் கழிவு நீர் பாய்ந்த சம்பவம் உட்பட இரு வேறு நீர் மாசுபாடு சம்பவங்கள் ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
ஜாலான் தெலோக் மெங்குவாங் மற்றும் ஜாலான் பெருபுக் ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட இரு தனித்தனி புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாகச் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) தெரிவித்தது.
ஜாலான் தெலோக் மெங்குவாங் பகுதியில் டிரோன் உதவியுடன் வாய்க்கால் வழித்தடங்களை ஆய்வு செய்தபோது, பச்சை நிறத்திலான கழிவு நீர் ஆற்றுப் பகுதியை நோக்கிச் செல்வது உறுதி செய்யப்பட்டது. “இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலை ஒன்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. எனினும், அந்த ஆலையிலிருந்து நேரடியாகக் கழிவுகள் வெளியேற்றப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக ‘ஜீரோ டிஸ்சார்ஜ் பாலிசி’ (ZDP) 2024 விதிகளின் கீழ் அந்த ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணையில், இந்தப் பச்சை நிறக் கழிவு நீர் தெலோக் பாங்லிமா காராங் தொழில்துறை பகுதியிலிருந்தே வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேவேளையில், ஜாலான் பெருபுக் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், வாய்க்காலில் இரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டு நீர் மாசுபடுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சுற்றுச்சூழல் துறை (JAS) மற்றும் கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தால் (MPKL) சீல் வைக்கப்பட்ட உலோகம் பூசும் (Metal coating) ஆலைக்கு அருகே உள்ள வாய்க்காலில் எண்ணெய் போன்ற கழிவுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவங்கள் குறித்து மலேசிய வேதியியல் துறையின் ஆய்வறிக்கைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், நீர் நிலைகலை மாசுபடுத்திய குற்றத்திற்காக 1999-ஆம் ஆண்டு LUAS அவசரச் சட்டத்தின் பிரிவு 79(4)-இன் கீழ் விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



