
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு புதுக்கடை மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சூழ விசேட பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக பல விசேட பொலிஸ் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றில் இன்று முற்பகல் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் குழாம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

