துபாய் சர்வதேச விமான நிலையத்தில் காணாமல் போன தனது ‘சூட்டி’ என்ற செல்லப்பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பயணி அவிஷ்கா கௌமாடி தெரிவித்துள்ளார்.
துபாயிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL226 மூலம் பூனையை விமானச் சரக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி அது காணாமல் போனது.
பூனையைத் தேடி சுமார் 28 மணி நேரம் விமான நிலையத்தில் தங்கியிருந்ததாகவும், அது கண்டுபிடிக்கப்படும் வரை விமானத்தில் பயணிக்க மறுத்ததாகவும் அவிஷ்கா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பூனையைக் கண்டுபிடிக்க உதவிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், டினாட்டா டிராவல் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
‘சூட்டி’ கண்டுபிடிக்கப்பட்டது தனது குடும்பத்துக்கு மீண்டும் நம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பூனையைப் பாதுகாப்பாக இலங்கைக்குக் கொண்டுவரக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“சூட்டி எனக்கு வெறும் செல்லப்பிராணி மட்டுமல்ல. அவன் என் அன்புக் குழந்தை, என் குடும்பம், என் இதயத்தின் ஒரு பகுதி” என அவர் தனது முகநூல் பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


